Wednesday, April 13, 2016

தமிழ் புத்தாண்டு தனுசு ராசி பலன்கள் 2016



அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்க்க விரும்பாத நீங்கள், எதற்காகவும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். குழந்தைகளை கண்டால் குதுகளிக்கும் உங்கள் மனசின் ஓரத்தில் விளையாட்டுத்தனமும் விளைந்திருக்கும். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அழகு, ஆரோக்யம் கூடும். இந்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் வீராவேசமாக பேசி விமர்சனங்களுக்குள்ளாவதை விட கனிவாகப் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பது தான் நல்லது என்ற முடிவுக்கு வருவீர்கள். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். 1.8.2016 வரை உங்கள் ராசிநாதன் குருபகவான் 9ல் நிற்பதால் பிரச்சனைகளை தொலைநோக்குப் பார்வையுடன் தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள். 

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணமகள் அமைவார். தாயாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். ஆனால், 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு 10ம் வீட்டில் நுழைவதால் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். எல்லோரும் பார பட்சமாக உங்களிடம் நடந்து கொள்வதாக குறை கூறுவீர்கள். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 11ல் அமர்வதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். தாயாரின் ஆதரவு பெருகும். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்த துர்முகி வருடம் முழுவதும் ராகுபகவான் 9ம் வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். என்றாலும் தந்தையாருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும்.

பாகப்பிரிவினை பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம். கோர்ட், கேஸ் என்று போக வேண்டாம். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும். நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்ளுங்கள். ஆனால், கேது 3ம் வீட்டிலேயே நீடிப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் வரும். விலை உயர்ந்த தங்க ஆபரணம், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். 

இந்த வருடம் முழுவதுமாக சனி 12ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான, விரையச் சனியாக தொடர்வதால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களில், உள்விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். உங்களிடம் இருக்கும் தவறான பழக்கங்களை மனைவி சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளப்பாருங்கள். எளிதாக முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி தான் முடிக்க வேண்டி வரும். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். எதிர்காலம் பற்றிய பயம் வந்து போகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டேப் போகிறதே என்று அச்சப்படுவீர்கள். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து முன்னின்று முடிப்பீர்கள். யாருக்கும் ஜாமீன், கேரன்டர் கையெழுத்திட வேண்டாம். 

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. ஏழரைச் சனி நடைபெறுவதால் வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக்ட் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். 2.8.2016 முதல் குரு உங்கள் ராசிக்கு 10ல் அமர்வதால் உத்யோகத்தில் பொறுப்பு அதிகமாகும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்து கொள்வார்கள். உங்களுக்கு இருக்கும் மூத்த அதிகாரிகளின் நெருக்கம் சிலரின் கண்ணை உருத்தும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சிலர் பணியிலிருந்து கட்டாய ஓய்வு பெறக் கூடிய சூழ்நிலை உருவாகும். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். வைகாசி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். 
 
கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றிப் பெறுவீர்கள். காதல் கசந்து இனிக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். கூடா நண்பர்களை தவிர்த்து நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 
 
மாணவ-மாணவிகளே! 
சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். ஒருமுறை படித்துவிட்டால் எல்லாம் மனசில் தங்கிவிடும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் நன்றாக புரிவது போல இருக்கும். ஆனால், தேர்வறையில் விடையை நினைவுக்கூறும் போது திணறுவீர்கள். 

அரசியல்வாதிகளே!
 எதிர்ப்புகள் ஆங்காங்கே இருக்கும். தொகுதி மக்களிடையே சலசலப்புகளும் வரும். கோபப்படாமல் அமைதியாக மக்களை எதிர்கொள்வது நல்லது. தலைமைக்கு கட்டுப்படுங்கள். சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். 

கலைத்துறையினரே! 
படைப்புகளை வெளியிடுவதில் தன்மானத்தை யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் சில வாய்ப்புகளைப் பெற்று படைப்புகளை வெளியிட்டு வெற்றி பெறப்பாருங்கள். வேற்றுமொழி வாய்ப்புகளும் வரும். 

விவசாயிகளே! தோட்டப் பயிர்களால் லாபமடைவீர்கள். பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்துப் போவது நல்லது. விலை குறைவாக இருக்கிறது என்று நினைத்து தரமற்ற விதைகளை வாங்கி விதைக்க வேண்டாம். இந்தப் புத்தாண்டு உங்களைக் கொஞ்சம் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், போராட்டங்களை கடக்கும் மன உறுதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமியையும், ஆஞ்சநேயரையும் தரிசித்து வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள். 

Also Read



No comments:

Post a Comment