உழைப்பே ஓய்வுக்குத் திறவு கோல், சுறுசுறுப்பே செல்வத்துக்கு திறவு கோல் என்பதை அறிந்த நீங்கள், எப்போதும் பரபரப்பாக இருந்து சாதிப்பீர்கள். ஆயிரம் புத்திமதிகளை விட ஓர் அனுபவம் தக்க பாடம் கற்பிக்கும் என்பதற்கேற்ப அனுபவ அறிவு அதிகமுள்ளவர்களாக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறுவீர்கள். வருடப் பிறப்பின் போது புதன் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் மனைவிக்கு வேலைக் கிடைக்கும். இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள் என்றாலும் 6ல் வீட்டில் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள் வந்துச் செல்லும்.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 2ல் அமர்ந்து பாதச்சனியாக தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்காதீர்கள். குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவுகள் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். குருபகவான் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணமகன் வந்தமைவார். மழலை பாக்யம் கிட்டும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு.
அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி வலிதமாகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 12ல் மறைவதால் வீண் விரயம், ஏமாற்றம், தூக்கமின்மை, செலவுகள் வந்துச் செல்லும். ஓய்வெடுக்கமுடியாதபடி வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். அவ்வப்போது கனவுத் தொல்லை அதிகமாகும்.
உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்களுடைய ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வரும். சாதாரணமாக நெஞ்சு வலிக்கும் ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்றெல்லாம் பயந்துவிடாதீர்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்வது நல்லது. குடிநீரை காய்ச்சி அருந்துங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். மஞ்சள் காமாலை, அல்சர்க்கான அறிகுறிகள் தெரியக் கூடும். லாகிரி வஸ்துக்கள், அசைவம் மற்றும் கார உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும்.
முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. சில நேரங்களில் எதையோ இழந்ததைப் போல மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப் பற்றி விமர்சித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இந்த துர்முகி ஆண்டு முழுக்கவே ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் திருப்பித் தருவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அனுபவப் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வருவீர்கள். மூத்த சகோதர வகையில் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.
குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கேது இந்தாண்டு முழுக்க 5ம் இடத்திலேயே நீடிக்கயிருப்பதால் அடிமனதில் வீண் குழப்பங்கள் எழும். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் தடை, தாமதங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். அவர்களின் முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். மனைவிக்கு கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். கடன் பிரச்னையால் இதுநாள் வரை கட்டிக் காப்பாற்றிய கௌரவம், நல்ல பெயரை எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் இருக்கும்.
27.1.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதனான சுக்ரன் ராசிக்கு 6ல் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, சையனஸ் இருப்பதைப் போல் தலை வலி, மூச்சுப் பிடிப்பு வந்துச் செல்லும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், அழகு சாதனப் பொருட்கள், கம்யூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். ஆடி, ஆவணி, மார்கழி, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.
உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். என்றாலும் காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில் அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும்.
கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
மாணவ-மாணவிகளே! விரும்பிய கல்விப் பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தலைமையிடம் செல்வாக்குக் கூடும். போராட்டங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
கலைத்துறையினரே! பிரபலமாவீர்கள். பெரிய நிறுவனங்களின் வாய்ப்புகள் வரும். வருமானம் உயரும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள்.
விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். பூச்சித் தொல்லை, வண்டுக்கடியிலிருந்து பயிரை காப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். இந்த துர்முகி வருடம் எதிர்பாராத பயணங்களையும், செலவுகளையும் தந்தாலும் செல்வம், செல்வாக்கையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: சங்கரன்கோவில் சங்கரநாராயணரை தரிசித்துவிட்டு வரச் சொல்லுங்கள். சொந்த ஊர் கோயில் திருப்பணியைச் செய்யுங்கள்.
No comments:
Post a Comment