Wednesday, April 13, 2016

தமிழ் புத்தாண்டு விருச்சிகம் ராசி பலன்கள் 2016



வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் நீங்கள், மனிதநேயம் மாறாதவர்கள். பதவி, பணத்திற்கு வளைந்துக் கொடுக்காத நீங்கள், பாசம், பந்தத்திற்கு அடிமையாவீர்கள். சூரியனும், சுக்கிரனும் சாதகமாக இருக்கும் போது இந்த துர்முகி வருடம் பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் பகவான் ஆட்சிப் பெற்று உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் இடையூறுகளைக் கடந்து சாதிக்கும் வல்லமை உண்டாகும். சனியுடன் சேர்ந்து நிற்பதால் அலர்ஜி, ரத்த சோகை, முன்கோபம், ரத்த அழுத்தம் வந்துச் செல்லும். உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். இந்தாண்டு முழுக்க ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக தொடர்வதால் ஆரோக்யத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு, விஷப் பூச்சிக் கடி வந்துப் போகும்.

சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். துரித உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகள் வேண்டாமே. சர்க்கரை நோய் எட்டிப் பார்க்கும். உடல் பருமனாவதை தவிர்க்க தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. நேரம் தவறி சாப்பிடுவதால் அல்சர் வரக்கூடும். விளம்பரங்களை பார்த்து ஏமாந்து சோப்பு, ஷாம்புவையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். தோலில் தடிப்பு, அலர்ஜி வரக்கூடும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. கோர்டு, கேஸ் என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். 1.8.2016 வரை குரு 10ல் தொடர்வதால் வேலைச்சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். பல வேலைகளையும் நீங்களே இழத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். விலை உயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 

உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் போராட்டங்கள் குறையும். தடைகளெல்லாம் நீங்கும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி, வகைப் பிறக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். ஷேர் மூலம் பணம் வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். 

பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பதவிகள், பொறுப்புகள் தருவார்கள். வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்களுடைய ராசிக்கு 12ல் மறைவதால் திட்டமிடாத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. உங்களை யாரும் மதிக்கவில்லை, யாருமே புரிந்து கொள்ளவில்லையென்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். 
 
இந்தாண்டு முழுக்க ராகுபகவான் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். தொழிலதிபர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்குவீர்கள். சிலர் செய்து கொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். என்றாலும் 
உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். வீடு கட்டுவதற்கு அரசாங்க அனுமதி தாமதமாகும். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். 
 
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். என்றாலும் பெரியளவில் முதலீடுகள் வேண்டாம். கடன் வாங்கி கடையை விரிவுப்படுத்தி, நவீனமாக்குவீர்கள். உணவு, இரும்பு, கன்சல்டன்சி, ரியல் எஸ்டேட், மர வகைகளால் ஆதாயம் உண்டு. தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். சித்திரை, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். 2.8.2016 முதல் உத்யோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். என்றாலும் ராகு 10ல் நிற்பதால் மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சித்திரை, ஆவணி, புரட்டாசி, தை மாதங்களில் தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! 
உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். தைரியம் கூடும். அண்டைமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். என்றாலும் தோலில் தடிப்பு, தேமல், தூக்கமின்மை வந்துச் செல்லும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மாணவ-மாணவிகளே!
 சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். ஒருமுறை படித்தால் மட்டும் போதாது அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்த்து நினைவில் நிறுத்துவது நல்லது. விளையாட்டுப் போட்டிகள், பொது அறிவு போட்டிகளில் பரிசு, பாராட்டுக் கிடைக்கும். 
 
அரசியல்வாதிகளே! கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். வழக்குகளை சந்திக்க நேரிடும். சாதாரண மக்களின் நாடித் துடிப்பை கண்டறிந்து அதற்கேற்ப உங்களுடைய செயல் திட்டத்தை நீங்கள் அமைத்துக் கொள்ளுங்கள். 
 
கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். கிசுகிசுத் தொந்தரவுகளும்,
விமர்சனங்களும் அதிகமாகும். 
 
விவசாயிகளே! 
வற்றிய கிணற்றில் நீர் ஊற அதிகம் செலவு செய்து தூர் வார்வீர்கள். ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரிட முயற்சி செய்யுங்கள். சிலர் புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். கனி, மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இந்தப் புத்தாண்டு அடுத்தடுத்த வேலைச்சுமையைத் தந்தாலும் தன்னம்பிக்கையாலும், துணிச்சலான முடிவுகளாலும் வெற்றி பெற வைக்கும்.
 
பரிகாரம்: திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப்பணியில் கலந்து கொள்ளுங்கள்.

Also Read



No comments:

Post a Comment