கடமை உணர்வு கொண்ட நீங்கள் காதல் வசப்படுபவர்கள். பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். ஒற்றுமை உணர்வு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டீர்கள். இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் தனாதிபதி சுக்கிரன் 7ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதுடன் உங்களது ராசியையும் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். மனைவி நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். இருசக்கர வாகனத்தை விற்று சிலர் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். சந்திரன் 10வது ராசியில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. போட்டி, தேர்வுகளில் வெற்றி உண்டு. கோபம் குறையும். துர்முகி வருடம் தொடக்கத்தின் போது செவ்வாய் 3ம் இடத்தில் வலுவாக நிற்பதால் தைரியம் பிறக்கும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். சின்ன இடத்தை விற்று பெரிய சொத்து வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ராசிநாதன் புதன் வருடப் பிறப்பின் போது 8ல் மறைந்திருப்பதால் உறவினர், நண்பர்களின் அன்புத்தொல்லைகள் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
இந்தாண்டு முழுக்க ராகுபகவான் ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மாதக் கணக்கில் தள்ளிப் போய் கொண்டிருந்த வேலைகளெல்லாம் முடிவடையும். பணப்பற்றாக்குறையால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், கேது 6ம் வீட்டில் நீடிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலமாக பணம் வரும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். வழக்கு சாதகமாகும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவார்கள்.
நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். 1.8.2016 வரை குரு ராசிக்கு 12ல் நிற்பதால் எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகமாகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்கள் இருந்து கொண்டேயிருக்கும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக வருவதால் உடல் நலம் பாதிக்கும். இன்ஃபெக்சன், அலர்ஜி, வயிற்று உப்புசம், வாய்ப்புண், ஹார்மோன் பிரச்னைகள் வந்து நீங்கும். சாதாரணமாக நெஞ்சு வலிக்கும். ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்றெல்லாம் யோசிப்பீர்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சரியான மருத்துவரை அணுகி உரிய மாத்திரையை உட்கொள்வது நல்லது. அடிக்கடி மருத்துவரை மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.
திடீரென்று அறிமுகமாகி உங்களை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் பனிப்போர் அதிகரிக்கும். ஒரே வீட்டில் இருந்து கொண்டே ஒருவருக்கொருவர் சில நாட்களில், சில நேரங்களில் மௌனமாக இருக்க வேண்டி வரும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்து காசோலை தருவது நல்லது. முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து பேசுவது நல்லது. 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 2ல் அமர்வதால் அதுமுதல் அமைதி உண்டாகும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும்.
27.2.2017 முதல் 11.4.2017 வரை செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 8ல் மறைவதால் சின்ன சின்ன ஏமாற்றங்கள், சனிபகவான் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிலேயே இந்தாண்டு முழுக்க முகாமிட்டிருப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு வரன் தேடி அலுத்துப் போனீர்களே! இனி நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் வந்தமையும். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல உத்யோகம் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். உங்களை எதிர்த்தவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள்.
வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். கல்வித் தகுதியில் சிறந்த அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். ஆனி, ஆடி, மாசி மாதங்களில் வியாபாரம் செழிக்கும். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலை விட்டு விட்டு வேற்று தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.
உத்யோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்ச உணர்வு தினந்தோறும் வந்து போகும். உயரதிகாரிகளால் அலைக்கப்படுவீர்கள் என்றாலும் சக ஊழியர்களால் உதவிகள் உண்டு. சிலர் உங்கள் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனி, ஆடி, கார்த்திகை மாதங்களில் வேலையில் ஆர்வம் உண்டாகும். சிலர் புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.
கன்னிப் பெண்களே! உங்களின் கனவுகள் நனவாகும். எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். என்றாலும் நெருங்கிப் பழகிய நண்பர்கள் சிலர் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. கவனம் தேவை. அல்சர், வாய்ப்புண், தேமல் வரக்கூடும். பெற்றோருக்கு முக்கியத்துவமளியுங்கள்.
மாணவ-மாணவிகளே! எண்ணங்கள் பூர்த்தியாகும். விளையாட்டுத்தனத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். நினைவாற்றல் கூடும். வகுப்பறையில் சக மாணவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளே! புள்ளி விவரங்களுடன் எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேசி கட்சி சகாக்களின் பாராட்டைப் பெறுவீர்கள். தொகுதி மக்களுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கலைத்துறையினரே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். மூத்த கலைஞர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புது வாய்ப்புகளும் வரும்.
விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். எலிகளை அழிக்கும் பாம்புகளை அடிக்க வேண்டாம். ஊரில் மதிப்பு, மரியாதைக் கிடைக்கும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். ஆகமொத்தம் இந்த துர்முகி ஆண்டு சற்றே சுகவீனங்களைத் தந்தாலும் உங்களின் நீண்ட கால கனவுகளைளெல்லாம் நிறைவேற்றுவதாக அமையும்.
பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுங்கள்.
No comments:
Post a Comment