Wednesday, April 13, 2016

தமிழ் புத்தாண்டு மகரம் ராசி பலன்கள் 2016



ஏர்முனையாக இருந்தாலும், போர் முனையாக இருந்தாலும் எதிலும் முதலில் நிற்கும் நீங்கள், எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்கள். அதிர்ஷ்டத்தை நம்பி காலத்தை கழிக்காமல் உழைப்பால் உயர்பவர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடிவடையும். சுறுசுறுப்பாக பல வேலைகள் செய்து முடிப்பீர்கள். இந்த துர்முகி வருடம் உங்களுக்கு 6வது ராசியில் பிறப்பதால் சவால்களை சந்திக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பயணங்களும், செலவுகளும் உங்களை துரத்தும். சிலருக்கு வேற்றுமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 

பழைய வாகனம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். இந்தாண்டு முழுக்க ராகு 8லும், கேது 2ம் இடத்திலும் நீடிப்பதால் இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப்பாருங்கள். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும். இடமாற்றமும் இருக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வேண்டி வரும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். 

வறட்டு கவுரவத்திற்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இந்த துர்முகி வருடம் முழுவதுமாக உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். வருமானம் உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். வீட்டில் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன்-மனைவி இருவரும் கலந்துப் பேசி குடும்பச் செலவுகளை குறைக்க முடிவுகளெடுப்பீர்கள். குழந்தை இல்லாமல் கோயில், குளமென்றும் சுற்றிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பூர்வீக சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். 

கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். 1.8.2016 வரை குருபகவான் 8ல் மறைந்திருப்பதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பல வருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். ஆனால், 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நுழைவதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். 

வீண் குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். திடீர் பணவரவு, யோகம் எல்லாம் உண்டாகும். உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். வளைந்துக் கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். அடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆனால் 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்வதால் வளைந்து கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுவீர்கள். முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. 

வியாபாரத்தில் 
சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படப்பாருங்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக திருத்துங்கள்.தொலைக்காட்சிவானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். மூலிகை, கட்டிட உதிரி பாகங்கள், துணி, புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்துப் போங்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். 

உத்யோகத்தில் 
உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். உங்களின் கடின உழைப்பை மூத்த அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் இழந்த சலுகைகளையும், மதிப்பு, மரியாதையையும் மீண்டும் பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறுயிடத்திற்கு மாற்றப்படுவார். 

கன்னிப் பெண்களே! காதல் தோல்வியில் கலங்கி நின்றீர்களே! அதிலிருந்து மீள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்று மொழிக்காரர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள். 

மாணவ-மாணவிகளே! போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடி சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அரசியல்வாதிகளே!
 பொதுக் கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். தலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள். உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள். 

கலைத்துறையினரே! 
சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்தகலைஞர்களால் உதவிகள் உண்டு. 

விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரருடன் பாந்தமாக பழகுங்கள். வரப்புச் சண்டைகள் வேண்டாம். அதிக வட்டிக்கு புதிதாக கடன் வாங்கி பழைய கடனை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். பழுதான பம்பு செட்டை மாற்றிவிட்டு புதுசு வாங்குவீர்கள். இந்த துர்முகி வருடம் சின்னச் சின்ன ஏற்றத் தாழ்வுகளை தந்தாலும் உங்களின் வளர்ச்சிப் பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதாக அமையும். 

பரிகாரம்: 
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சுவாமிமலை முருகனை தரிசியுங்கள். வயதானவர்களுக்கு செருப்பும் குடையும் வாங்கிக் கொடுங்கள் 

Also Read



No comments:

Post a Comment