எல்லா சம்பவங்களுக்கும் ஒரு காரண, காரியம் இருக்கும் என்பதை உணரும் நீங்கள், யாரிடமும் உதவி கேட்க தயங்குவீர்கள். அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட நீங்கள், அதை அடுத்தவர்களுக்காக மட்டும் பயன்படுத்துவீர்கள். இந்தப் புத்தாண்டு உங்களின் 5ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வரன் தேடித் தேடி அலுத்துப் போன உங்களின் மகளுக்கு இந்தாண்டு கல்யாணம் சீரும் சிறப்புமாக முடியும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். தூரத்து சொந்தம் தேடி வரும். பூர்வீக சொத்தை சீர்த்திருத்தம் செய்வீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் சூரியன் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ம் இடத்திலேயே தொடர்வதால் உங்களின் கடின உழைப்பிற்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். துர்முகி வருடம் பிறக்கும் நேரத்தில் செவ்வாய் பகவான் ஆட்சிப் பெற்று 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது வேலை கிடைக்கும். 1.8.2016 வரை குருபகவான் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு ராசிக்கு 8ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல் அதிகரிக்கும்.
தன்னம்பிக்கை குறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். பெயர், புகழ், கௌரவம் குறைந்து விடுமோ என்ற ஒரு பயம் வரும். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். ஆனால், 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 9ல் அமர்வதால் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆன்மிகவாதிகளின் ஆசி பெறுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். மாதா மாதம் லோன் வாங்கி பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம்.
அதற்கான வழிவகைகள் பிறக்கும். வருடப் பிறப்பு முதல் இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 7ம் இடத்திலேயே ராகு தொடர்வதால் வீண் சந்தேகத்தாலும், ஈகோப் பிரச்னையாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை வந்து போகும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். கேதுவும் இந்தாண்டு முழுக்க உங்கள் ஜென்ம ராசியிலேயே ஆரோக்யம் பாதிக்கும்.
அலுப்பு, சலிப்பு, ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, அல்சர், அலர்ஜி, காய்ச்சல், கெட்ட கனவுகளெல்லாம் வந்து செல்லும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடுவது நல்லது. ஹார்மோன் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப் படுவீர்கள். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும்.
உத்யோகத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் ஒரு அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துச் செல்லும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடி பெற வேண்டி வரும். சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் தாமதமாகி முடியும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். வயிற்று வலி, முடி உதிர்தல் வந்து போகும். பள்ளிக் கல்லூரி கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மாணவ-மாணவிகளே! டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள். நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே! கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள். தகுந்த ஆதாரமின்றி எதிர்க் கட்சியினரை தாக்கி பேச வேண்டாம்.
கலைத்துறையினரே! பரபரப்பாக காணப்படுவீர்கள். சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்ன சின்ன வாய்ப்புகளையும் கடந்து பெரிய வாய்ப்புகளும் வரும்.
விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். கோட்டு, கேஸ் என்றெல்லாம் அதிகம் செலவு செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாம். எண்ணெய் வித்துகள், துவரை, உளுந்து பயறு வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்தப் புத்தாண்டு உடல் நலக் குறைவையும், நெருக்கடிகளையும் தந்தாலும் சமயோஜித புத்தியால் முன்னேற வைக்கும்.
பரிகாரம்: வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசித்து வாருங்கள். சாலைத் தொழிலாளிகளுக்கு இயன்றளவு உதவுங்கள்.
No comments:
Post a Comment